நிபந்தனைகளுடன் கையெழுத்தான இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் - அறிவித்த அமெரிக்கா
இஸ்ரேல் - லெபனான் இடையே புதிய போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலையீட்டுக்கு பின் இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்த அதிகாரப்பூர்வமாகச் சம்மதித்துள்ளன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற அதீவ தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அமைதி முடிவு எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் மூன்று நிபந்தனைகளின் கீழ் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, "ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இரு நாட்டு எல்லையில் உள்ள தெற்கு லிதானி பகுதியில் இருந்து ஹெஸ்புல்லா தனது படைகள் அனைத்தையும் முழுமையாகப் பின்வாங்கிக் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் நேரடி மேற்பார்வையில் இரு நாடுகளும் இணைந்து எல்லைப் பகுதிகளில் சில குறிப்பிட்ட பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கும். இந்த மண்டலங்களின் முழுமையான பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு லெபனானின் அதிகாரப்பூர்வ ராணுவத்திடம் மட்டுமே ஒப்படைக்கப்படும். ஹிஸ்புல்லா உட்பட வேறு எந்தவொரு ஆயுதமேந்திய அமைப்புகளுக்கும் இந்த மண்டலங்களுக்குள் நுழைய அனுமதி கிடையாது" என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக பேச்சுவார்த்தை நடந்து வந்த போதே தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் ஹிஸ்புல்லா அமைப்பை அழிப்பதாக கூறி லெபனானுக்குள் தரைவழியாகிவரும் வான்வழியாகிவரும் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடந்து வந்தது. இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்த சூழலில் தற்போது எட்டப்பட புதிய ஒப்பந்தத்தை இஸ்ரேல் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபுறம் லெபனான் மீதான தாக்குதலால் அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையை ஈரான் நிறுத்தியது. தற்போது எட்டப்பட்டுள்ள இஸ்ரேல் - லெபனான் ஒப்பந்தம் ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர இன்றியமையாததாக இருப்பதால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி புதிய ஒப்பந்தம் எட்ட முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.