Select Location
All Locations
State
Region
City / District
திறமையின்மையின் இலக்கணமான ஒன்றிய கல்வி அமைச்சரே ராஜினாமா செய்திடுங்கள்: சிபிஎஸ்இ விவகாரத்தில் காங். அழுத்தம்

திறமையின்மையின் இலக்கணமான ஒன்றிய கல்வி அமைச்சரே ராஜினாமா செய்திடுங்கள்: சிபிஎஸ்இ விவகாரத்தில் காங். அழுத்தம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தளத்தில், ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பகிர்ந்து வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஓஎஸ்எம் செயல்முறைக்கான ஒப்பந்தத்தை பெற்ற கோம்எம்ட் நிறுவனம் இப்பணிக்கு தகுதியற்றது என சிபிஎஸ்இ மற்றும் கல்வி அமைச்சகத்தில் உள்ள அதன் ஆதரவாளர்களே எதிர்பார்த்திருப்பார்கள். அதனால்தான் திறம்பட செயல்பட முடியாத நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கும் தனது சொந்த அதிகாரத்தை சிபிஎஸ்இ கடந்த செப்டம்பரில் தாரைவார்த்து திருத்தத்தை வெளியிட்டது. இது கோஎம்ட்டை காப்பாற்றுவதற்கான அரசாங்கத்தின் ஆதரவுடன் செய்யப்படும் விவரிக்க முடியாத முயற்சி. டெண்டர்களில் இதுபோன்ற முறைகேடுகளை மேற்பார்வையிட்டு செயல்படுத்தி லட்சக்கணக்கான மாணவர்களின் மன நலனை பாதித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நாடு இன்னும் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தன்னையோ தனது சகாக்களையோ நேர்மை, ஒழுக்கத்தின் எந்தவொரு தரத்திற்கும் உட்படுத்தியதாக தெரியவில்லை. எனவே, அமைச்சர் பிரதான் தனது ராஜதர்மத்தை கடைபிடித்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

வினாத்தாள் கசிவு: மாபியாவுடன் பாஜ காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கேரா செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘பிரதமர் மோடி பரிட்சா பே சர்ச்சா மற்றும் எக்ஸாம் வாரியர்ஸ் போன்ற தனிப்பட்ட விளம்பர பிரசாரங்களை தொடர்கின்ற வேளையில், பாஜவினர் வினாத்தாள் கசிவு மாபியாவுடன் கைகோர்த்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதனால் கோடிக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் தினம் தினம் அவதிப்படுகின்றனர். 90 வினாத்தாள் கசிவுகளால் 9 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பொறுப்புடன் பேசவில்லை. குறைந்தபட்சம் அவர் ஒன்றிய கல்வி அமைச்சரவையாவது பதவியிலிருந்து நீக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

Source : Dinakaran

1 hour ago

Home Flash News