“மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் சி.மகேந்திரன்”- த.வெ.க.வில் சேர்ந்த சி.மகேந்திரன் மீது CPI விமர்சனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்த நிலையில், அவர் குறித்து சிபிஐ விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், “கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மகேந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.கட்சியின் நிறுவனமான நியூ செஞ்சுரி பதிப்பகத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு துணை போனவர் மகேந்திரன். மோசடி பேர் வழிகளுடன் இணைந்து போலி ஆவணங்களை உருவாக்கியவர். ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதால் கட்சி அவரிடம் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தது. செய்த தவறுகளை திருத்திக் கொண்டு கட்சியில் செயல்பட இருந்த வாய்ப்பை மகேந்திரன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் மீதான கட்சியின் நடவடிக்கை மிக சரியானதுதான் என அவரே உறுதிப்படுத்திவிட்டார்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்தவர் மகேந்திரன். 1971ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர ஊழியராக பணியாற்றிவந்தவர். 2015ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். மூத்த நிர்வாகி மகேந்திரன், சென்னை பனையூரில் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது