நீர் இருப்பு 40 நாட்களுக்கு மட்டுமே... மும்பை நகருக்கு தண்ணீர் பற்றாக்குறை அபாயமும் காரணமும்!
இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கம் உள்ள நகரம், உலகில் மக்கள் நெருக்கம் உள்ள 4-வது மெட்ரோபாலிட்டன் நகரம் எனப் பெயரெடுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையில் தவிக்கக் கூடிய சூழலை எதிர்கொண்டுள்ளது. மும்பை நகரம் (கிரேட்டர் மும்பை), புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளில் நீர் இருப்பு மிக ஆபத்தான நிலையை எட்டி, 10% மட்டுமே கையிருப்பு இருக்கிறது. அதாவது அடுத்த 40 நாட்களுக்கு மட்டுமே மும்பை மக்களுக்கு குடிநீர் வழங்கத் தேவையான நீர் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது. ஏற்கெனவே பருவமழை தாமதமாகிய நிலையில், இது மேலும் தொடர்ந்து, வெயிலின் தாக்கமும் அதிகரித்தால், நீர் இருப்பு மேலும் குறையலாம், குடிநீர் ஆதாரத்துக்கு பெரும் பாதிப்பு வரலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அச்சம் தெரிவித்துள்ளது.
நீர் நிலைகளில் இருப்பு எவ்வளவு?
மும்பை நகருக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது 7 ஏரிகள். தான்சா, விஹார், துளசி, பட்சா, அப்பர் வைத்ராணா, மோடக் சாஹர், மிடில் வைத்ராணா ஆகிய ஏரிகளில் இருந்துதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 4 ஏரிகள் பிரிஹான்மும்பை மாநகராட்சிக்கு (பிஎம்சி) சொந்தமானது, 3 ஏரிகள் மகாராஷ்டிர அரசுக்கு சொந்தமானது.
மும்பை, புறநகர் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 2.18 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு நாள்தோறும் 3,950 மில்லியன் லிட்டர் தண்ணீரை பிஎம்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் 7 ஏரிகளில் தற்போது 1,44,918 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே இருப்பு இருக்கிறது. இது தோரயமாக 40 நாட்களுக்கானதுதான். பருவமழை தாமதமாகி வருவதால், நிலைமை மோசமாவதை அறிந்த பிஎம்சி, கடந்த 15-ம் தேதி முதல் குடிநீர் வழங்களை 10 சதவீதம் குறைத்துவிட்டது. அதாவது 4,100 மில்லியன் லிட்டர் அளவு வரை குறைத்துவிட்டது. முக்கிய ஏரியான அப்பர் வைத்தராணா ஏரி வறட்சியை நோக்கி நகர்ந்துள்ளது. மோடக் சாஹர் ஏரியில் நீர் இருப்பு 29%, தான்சா ஏரியில் 4.71%. மிடில் வைத்ராணாவில் 10.34%, பட்ஸாவில் 9.24%, விஹார் ஏரியில் 42.11%. துளசி ஏரியில் 23% நீர் இருப்பு மட்டுமே இருக்கிறது.
நடவடிக்கை என்ன?
மும்பை மக்களுக்கு அடுத்த 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க நீர் இருப்பு இருப்பதை அறிந்த பிஎம்சி நிர்வாகம், அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் குறிப்பாக தினசரி குடிநீர் வழங்கும் அளவை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் குறைத்துவிட்டது. வர்த்தகம் மற்றும் தொழில் துறை, விளையாட்டு மைதானம் பகுதிகளுக்கான குடிநீர் வழங்களை 20% வரை குறைத்துவிட்டது. கட்டிடங்களுக்கான நீர் வழங்களை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்களுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நீச்சல் குளம் கட்டுவது, நீச்சல் குளம் செயல்பாட்டையும் மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை செய்துள்ளது.
பொதுக் கழிப்பறை, வர்த்தக மையங்களிலும், பன்முக தேசிய நிறுவனங்களிலும், மருத்துவமனைகளிலும், கழிப்பறை பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர குடிநீரை தவறாகப் பயன்படுத்தினாலும், அதை வீணாக்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடுக்கு என்ன காரணம்?
மும்பையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், பெரிய அளவிலான தண்ணீர் பஞ்சத்தை அந்த மக்கள் எதிர்கொள்ள பருவமழை தாமதமாகி வருவதுதான் முக்கியக் காரணமாகும். குறிப்பாக தென் மேற்கு பருவமழை மும்பை பகுதில் ஜூன் 11 முதல் 25-ம் தேதிக்குள் நல்ல மழையை கொடுத்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் இதே காலகட்டத்தில் தேவைக்கும் அதிகமாகவே நீர் இருப்பு இருக்க பருவமழை சரியான நேரத்தில் பெய்ததுதான் காரணம். ஆனால், பருவமழை தொடர்ந்து தாமதமாகி வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது.