Select Location
All Locations
State
Region
City / District
சாதியை காரணம் காட்டி பள்ளிகளில் சாமி கயிறுகளை தடை செய்வதை அனுமதிக்க முடியாது: இந்து முன்னணி

சாதியை காரணம் காட்டி பள்ளிகளில் சாமி கயிறுகளை தடை செய்வதை அனுமதிக்க முடியாது: இந்து முன்னணி

சென்னை: ‘சாதி கயிறுகளை காரணம் காட்டி சாமி கயிறுகளை தடை செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என தெரிவித்துள்ள இந்து முன்னணி, ‘சமூக நீதி என்ற பெயரில் கல்விக் கூடங்களில் மத அடையாளங்களை புறக்கணிக்கச் சொல்லும் அறிவிப்பை பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் திரும்பப் பெற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘சாதி பிரிவினைகளை தடுக்கும் வகையில் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் கயிறுகள் கட்டி வரக்கூடாது எனவும், எந்தவிதமான மத அடையாளங்களையும் அணிந்து வரக் கூடாது எனவும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். சாதி மோதல்களை தடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி சந்துரு இடதுசாரி சிந்தனையாளர்; நாத்திக எண்ணம் கொண்டவர். திமுக ஆட்சியில் அவரது பரிந்துரைகளை திமுக அரசே நடைமுறைப்படுத்தாமல் அதனை புறக்கணித்தது. அந்த சமூகவிரோத கருத்துகளை புதிய அரசான தாங்கள் அமல்படுத்த நினைப்பது கண்டனத்திற்குரியது.

பள்ளிகளில் சாதி ரீதியாக பிரிவினை கூடாது என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக மத அடையாளங்களை அணிந்து வரக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற, அரசியல் சாசனம் உறுதி அளிக்கிறது. இதனை மறுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. பள்ளிக் கூடங்களில் இந்து மாணவர்கள் தங்கள் நெற்றியில் திலகம் வைத்து வருவார்கள். குலதெய்வங்களின் கயிறுகள், உள்ளூர் கோயிலில் காப்பு கட்டும் கயிறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அணிந்து வருவார்கள். இது ஆன்மிகத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறித்த விஷயமாகும். கிராமப்புறங்களில் மட்டுமல்ல நகர்ப்புறங்களிலும் கூட இன்றளவும் உடம்பு சரி இல்லாமல் போனால் கோயிலுக்கு சென்று கயிறு கட்டும் பழக்கம் உள்ளது. இதனை தடுப்பது மாணவர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் செயலாகும்.

கயிறு கட்டி வர வேண்டாம் என சொல்லும் அரசு, முஸ்லிம் மாணவர்கள் குல்லா, மாணவிகள் புர்கா அணிந்து வருவது மற்றும் சிலுவை அணிந்து வரக்கூடாது என சிறுபான்மை மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்குமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் ஏற்கெனவே பல பள்ளிகளில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து வரும் மாணவர்கள் துண்டு அணிந்து வரக்கூடாது என கூறியதற்கு பிரச்சினை எழுந்ததையும் இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கைவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறோம். சிறுபான்மையினர் நடத்தும் பல கல்விக் கூடங்களில் இந்து மாணவர்கள் குங்குமம் இடுவது கூட தடை செய்யப்படுகிறது. மாணவிகள் பூ வைத்து வந்தால் அதை பிடுங்கி எறிவது என கட்டுப்பாடுகள் பிரச்சினைகளை ஏற்படுத்தின. இதையெல்லாம் இந்த அரசாங்கம் தட்டிக் கேட்குமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

பள்ளிக் கூடங்களில் மத அடையாளங்களோடு வரக்கூடாது என சொல்கிறீர்கள். ஆனால் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் கல்விக் கூடங்கள் அவர்களின் மத வழிபாட்டு தலமாகத் தானே காட்சி அளிக்கின்றன. அதனை நீக்க உத்தரவு போடும் தைரியம் இந்த அரசுக்கு இருக்கிறதா? சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பல இந்து குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு அவர்களை தினமும் பைபிள் வாசகங்களை பாட வைக்கின்றனர். இது மதத்தை கட்டாயமாக திணிப்பது தானே. எனவே, கிறிஸ்தவ பள்ளியை பொது கல்வி பட்டியலில் இருந்து நீக்கி கிறிஸ்தவ பள்ளியாக அறிவிக்க அமைச்சர் தயாரா? சாதி கயிறுகளை காரணம் காட்டி சாமி கயிறுகளை தடை செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டசபையில் கூட ‌சமத்துவம், சமூக நீதி என்ற சித்தாந்தத்தை முன் வைக்கும் வகையில் முஸ்லிம் கிறிஸ்தவ சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மத அடையாளங்களை கைவிட வலியுறுத்துங்கள்.

புதிதாக பதவியேற்றுள்ள இந்த அரசாங்கம் கல்வித் துறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, மாணவர்களுக்கான திறமைகளை வளர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு கடந்து திமுக ஆட்சி செயல்படுத்திய மக்கள் விரோத செயல் திட்டங்களை திமுகவின் நிழல் அரசாக தாங்கள் செயல்படுத்த நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது எல்லோருக்குமான ஆட்சி என்பதை உறுதி செய்யும் விதமாக மத அடையாளங்களை அணிந்து கொண்டு பள்ளிகளுக்கு வரக் கூடாது என்ற அறிவிப்பை கல்வித் துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ என்று காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News