Select Location
All Locations
State
Region
City / District
24 மணி நேரம் கெடு..! சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்றாவிட்டால் பறிமுதல்..!

24 மணி நேரம் கெடு..! சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்றாவிட்டால் பறிமுதல்..!

சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் முதல் உட்புற தெருக்கள் வரை, பழுதடைந்த மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்கள், பல மாதங்களாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துாசி படிந்து குப்பையாக காட்சியளிக்கும் இத்தகைய வாகனங்களின் அருகே பலர் குப்பையை கொட்டி வருகின்றனர். மறைவாக இருப்பதால், சிறுநீர் கழிக்கும், மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்களுக்காகவும் பயன்படுத்தி கொள்கின்றனர்.

இதனால், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகமாகிறது. குறிப்பாக, 'டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள், பழுதடைந்த வாகனங்களில் முட்டையிடுகின்றன. பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது. இது போன்று, பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் வாகனங்களுக்கு, 15 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, உரிமையாளர்கள் வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும். நடவடிக்கை அதேநேரம், உரிமை கோரப்படாத வாகனங்கள், பொது ஏலத்தில் விடப்பட்டன. ஆனாலும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீதான நடவடிக்கையை மீண்டும் மாநகராட்சி தொடங்கியுள்ளது. கடந்த முறை போல், விதிமீறலில் ஈடுபடும் உரிமையாளர்களுக்கு கால அவகாசம் அளிக்காமல், உடனடி நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது. பொது ஏலம் அதன்படி, நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களில், மாநகராட்சி பணியாளர்கள், 'நோட்டீஸ்' ஒட்டி வருகின்றனர். அந்த நோட்டீசில், 'சாலையை ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத வாகனங்களை மாநகராட்சி அகற்றி பறிமுதல் செய்யும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.

Source : Smacy News

1 hour ago

Home Flash News