Select Location
All Locations
State
Region
City / District
யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்!

யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்!

குடியரசுத் தலைவருக்கு நிர்வாகம், சட்ட இயற்றுதல், நிதி, நீதித்துறை, இராணுவம் மற்றும் அவசரகால அதிகாரங்கள் போன்றவை அரசியலைப்பால் வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்களை பின்வருமாறு காணலாம்.

நிர்வாக அதிகாரங்கள்

இந்திய அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளும் குடியரசுத் தலைவரின் பெயரிலேயே அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்படுகின்றன.

தனது பெயரில் பிறப்பிக்கப்படும் ஆணைகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் விதிகளை குடியரசுத் தலைவர் உருவாக்கலாம்.

ஒன்றிய அரசின் அலுவல் நடவடிக்கைகள் சீராகவும் வசதியாகவும் நடைபெறுவதற்கும், அந்தப் பணிகளை அமைச்சர்களிடையே பகிர்ந்தளிப்பதற்கும் குடியரசுத் தலைவர் விதிகளை வகுக்கலாம்.

பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் குடியரசுத் தலைவரின் விருப்பம் (Pleasure of the President) நீடிக்கும் வரை பதவியில் இருப்பார்கள்.

குடியரசுத் தலைவர் இந்தியாவின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India) நியமித்து, அவரின் ஊதியத்தை நிர்ணயிக்கிறார். தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரின் விருப்பம் உள்ளவரை பதவியில் நீடிப்பார்.

இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில ஆளுநர்கள், நிதிக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்ற முக்கிய பதவிகளுக்கு குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

ஒன்றிய அரசின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சட்டமியற்றல் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து தேவையான தகவல்களை பிரதமரிடமிருந்து பெறும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

அமைச்சரவை பரிசீலிக்காமல், ஒரு அமைச்சரால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட எந்தவொரு விஷயத்தையும் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு குடியரசுத் தலைவர் பிரதமரைக் கோரலாம்.

பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குடியரசுத் தலைவர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கலாம்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பையும், மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக குடியரசுத் தலைவர் மாநிலங்களிடையேயான கவுன்சிலை (Inter-State Council) அமைக்கலாம்.

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நிர்வாகிகள் (Administrators) மூலமாக ஒன்றியப் பிரதேசங்கள் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன.

ஒரு பகுதியை அட்டவணைப் பகுதியாக அறிவிப்பதற்கும், அத்தகைய அட்டவணைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும் குடியரசுத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

Source : Dinamani

7 hours ago

Home Flash News