Select Location
All Locations
State
Region
City / District
“தவெகவினர் தற்குறிகள் இல்லை அம்புக்குறிகள்” - ராகவா லாரன்ஸ்

“தவெகவினர் தற்குறிகள் இல்லை அம்புக்குறிகள்” - ராகவா லாரன்ஸ்

சென்னை: “தவெக அரசின் ஒரு மாத கால செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. புதிய அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். இந்த ஆட்சியின் மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்க பொறாமைதான் காரணம். தவெகவினரை தற்குறிகள் என விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்குறிகள் இல்லை அம்புக்குறிகள்” என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ், “ அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா எனக் கேட்டு சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். அதற்கு பதிலளித்துள்ளவர்கள், சின்னக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என்னை அரசியலுக்கு வருமாறு உரிமையோடு அழைக்கின்றனர். நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். விரைவில் என் ரசிகர்களை அழைத்து, மேடையில் என் தாயை அமரவைத்து, அந்த நல்ல முடிவை அறிவிக்க உள்ளேன்.

திருநங்கைகள் என்னைப் பார்க்க வந்துள்ளதாக சொன்னார்கள், ஆனால் இவ்வளவு பேர் இங்கே வந்துள்ளார்கள். நீங்கள் நினைத்தது நடக்கப்போகிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இதனால் தான் அரசியலுக்கு வரலாமா என மக்களிடம் கேட்டேன். அதில் என்ன தவறு. நான் இனி ஏதாவது பெரிய முடிவு எடுத்தால் மக்களிடம் கேட்டுத்தான் செயல்படுவேன்.

தவெக அரசின் ஒரு மாத கால செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. கோயில்கள், பள்ளிகள் அருகில் இருந்த மதுக்கடைகளை மூடும் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கல்வித்துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. புதிய அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

புது இடத்தில், ஒரு வாடகை வீட்டுக்குச் சென்றாலே அங்கு பழக ஒரு மாதம் ஆகும். அந்த வீட்டில் எது பிரச்சினை, அந்தத் தெருவில் உள்ள நாய்களை எப்படி நமக்குப் பழக்கப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளவே காலநேரம் தேவை.

ஒரு நாய்க்கோ, ஒரு வாடகை வீட்டுக்கோ நேரம் தேவை என்றால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கும் கால அவகாசம் கொடுப்பது நல்லது என நான் நினைக்கிறேன். இந்த ஆட்சி மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்க பொறாமைதான் காரணம். விமர்சனங்களை வைப்பதற்கு முன்பு, நாம் என்ன செய்தோம் என்று யோசனை செய்துவிட்டு விமர்சனம் வைத்தால் நன்றாக இருக்கும்.

திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறேனா என்பதை விரைவில் ரசிகர்கள் முன்பு அறிவிப்பேன். எல்லா கட்சிகளின் தலைவர்களும் எனக்கு நண்பர்கள் தான். அவர்களின் ஆசியை பெற்றே என் முடிவை அறிவிப்பேன்.

ரஜினியின் ஆசிர்வாதம் இல்லாமல் நான் எதையும் செய்வதில்லை. அவரின் ஆசியோடுதான் எல்லாவற்றையும் செய்வேன்.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News