பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்
பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு என சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்தார். பயம் இல்லாமல் பெண்கள் வாழ வேண்டும் என்பதே தனது குறிக்கோள் எனவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அரசு விழாவில், காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:
மனதிற்கு நெருக்கமான ஒன்று. நமது பாட்டி, அம்மா, அக்கா, தங்கை, ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறினேன். அதனை உணர்வுப்பூர்வமாகத்தான் கூறினேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. சொன்னதை எல்லாம் படிப்படியாக செய்வோம். அதில் தெளிவாக இருக்கிறோம் பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் பிரச்னை பெரிதானதற்கு காரணம். இதற்கு காரணம் யார் என்பதை நான் கூறி தெரியவேண்டும் என்பது இல்லை.
போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைதான். இது தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பு சட்டம் - ஒழுங்கு தொடர்புடையது மட்டும்தானா? தனிமனித ஒழுக்கத்துடன் தொடர்புடையது. ஒழுக்கத்துடன் இருந்தால் பல பிரச்னைகளை கட்டுப்படுத்தலாம்.